புதன், 21 அக்டோபர், 2015

அவசர உதவிக்கு


நேற்று (20.10.2015 ) 
காலை 10 மணிக்கு அலுவலகம் திறக்கும் போதே ஒரே டென்ஷன் !
காரணம் அலுவலகம் முன்பு ஆட்டோக்களின் அணிவகுப்பு ,ஆக்கிரமிப்பு !
எத்தனை முறை தான் ஆட்டோ ஓட்டுனர்களிடம் இப்படி அலுவலக வாசலில் நிறுத்தாதீர்கள் என்று சொல்வது. 
அலுவலகம் அமைந்துள்ள அந்த சாலையின்  முழுக்கவே இரண்டு புறமும் இடைவெளி இல்லாமல் தொடர்ச்சியாக ஆட்டோக்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
தினமும் இவர்களுடன் அக்கப்போர் தான் !
20 ஆட்டோகளில்லிருந்து 30 ஆட்டோக்கள் வரை  வரிசையாக நிறுத்தி விட்டு, ஓரிடத்தில் ஒரு ஆட்டோவில் எல்லா ஓட்டுனர்களும் அமர்ந்து கொண்டு அரட்டை  அடிப்பது . இதனால் ஏற்படும் வாகன நெரிசலில் கார் ,இரண்டு சக்கர வாகன ஓட்டுனர்கள் படும்பாட்டை கண்டு ரசிப்பது ! கோபத்தில் யாராவது ரோட்டுல இப்படி ஆட்டோவை நிறுத்திக்கிட்டா மத்தவங்க எப்படி போறது ? என்று கேட்டால் ரோட்டுலதான் போகணும் என்று சொல்லிவிட்டு எகத்தாலமா சிரிப்பது ! அடுத்து யாராவது கேள்வி கேட்டா...? என்ன போலிசுக்கு போன் போடப்போறயா? என்று ஏளனமா பேசியதை கேட்ட என்னால் பொறுத்துக்கொள்ள முடியாமல் அவசர உதவிக்கு 100 க்கு போன் போட்டு புகார் அளித்தேன்.
வரும் ஆனா வராது என்ற கதையாக எந்த காவலரும் வந்த பாடில்லை !
மாலை சுமார் 5.00 மணியிருக்கும், யம்மா ...என்ற அலறல் கேட்டது.  அலுவலகம் வெளியே வந்து பார்த்தால், ஒரு  முதியவர் சைக்கிளோடு விழுந்து கிடந்தார். இன்னொரு புறம் ஒரு சிறுவன் இரண்டு சக்கர வாகனத்தோடு விழுந்து கிடந்தான்.
கூட்டம் கூடியது ! ஆளாளுக்கு தனக்கு தெரிந்ததை சொல்லிக் கொண்டிருந்தனர்.
இதெல்லாம் சரிபடாது. பேசாம 100க்கு போன் போடுங்க என்றார் ஒருவர்.   
சிறுவன் அழத் தொடங்கினான். அவனிடம்  அப்பாவின் செல் நம்பர் கேட்டதும், சிறுவன் கூட்டத்தினரை பார்த்து கெஞ்சினான் !
இதைக்கண்டு  அடிபட்ட முதியவரோ,
பாவம் அந்தப் பையன விட்டுடுங்க! ரோட்டுல நின்டிருக்கிற இந்த ஆட்டோவுக்கு பின்னாடி நான் சைக்கிளுல வந்தது அவனுக்கு தெரிஞ்சிருக்காது. மோதிட்டான்.
இந்த சைக்களுதான் எனக்கு சோறு போடுது! வீட்டு வீட்டுக்கு இந்த சைக்கிளுலதான் போயி  பழைய பேப்பர் வாங்கி வித்து பொழப்பு ஒட்டிக்கிட்டு வந்தேன்! சைக்கிள ரிப்பேர் பாக்க எவ்வளவு கேட்பானோ ? என்று பொலம்பினார், அவர் அருகில் கிடந்த சைக்கிளின் முன் சக்கரம் அவரது முதுகைப் போலவே கேள்வி குறியாய்  நெளிந்து கிடந்தது ! கூட்டத்தில் ஒருவர் ,ஐயா இத வெச்சுக்குங்க சைக்கிள் ரிப்பேருக்கு உதவும் என்று ரூபாய் நோட்டை நீட்டினார்.அவரும் பெற்றுக்கொண்டார். இன்னும் சிலரும் தம்மால் முடிந்ததை அந்த முதியவரிடம் பணமாக கொடுத்தனர். பணத்தை பெற்றுக் கொண்ட முதியவரின் அடிப்பட்ட வலியை மறந்து, அவரது போக்கை வாயில் புன்னகை பூத்தது !
         
               

வியாழன், 30 ஜூலை, 2015

கும்பிடு!

அம்மாவை ,

முதன் முதலாக 

கும்பிட்டேன்!

தொண்டன் ஆனேன் .

மறுமுறை 

கும்பிட்டேன் ,

எம் எல் ஏ ஆனேன் !

இன்னொரு நாள் 

கும்பிட்டேன் ,

அமைச்சரானேன்! 

சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் 

கும்பிட்டேன் ,

முதல்வரனேன் !

கலாம் அவர்களே,

உங்களை கும்பிட்டேன் 

மனிதன் ஆனேன்!

 



செவ்வாய், 28 ஜூலை, 2015

கலாம் ஒரு சரித்திரம் !

கலாம் ஒரு சரித்திரம் !

" செயல் "-அதுவே சிறந்த சொல் ! என்பார் சேகுவேரா.
சிலர் நன்றாக எழுதுவார்கள் . சிலர் உணர்ச்சி கொப்பளிக்க பேசுவார்கள் . செயல் என்பதோ சிறிதும் இருக்காது.
அப்துல் கலாம் அவர்களிடம்  அவரது எழுத்தும் பேச்சும் போன்றே, செயலும் அமைந்திருக்கும் .
ஜனாதிபதி பதவிக்கு உரிய அதிகாரத்தை உரிய முறையில் செவ்வனே செய்து காட்டிய முதல் குடிமகன் !
ஜனாதிபதி மாளிகையில் தனது உறவினர்களை குடியமர்த்தாமல், தனது  புத்தகங்களால் அலங்கரித்து ஜனாதிபதி மாளிகை மரபுக்கு மகுடம்  சூட்டிய மாமேதை !
ஜனாதிபதி மாளிகையில் தன்னை பார்க்க வந்த சகோதரருக்கு, தன் சொந்த கையிருப்பில் இருந்து போக்குவரத்து உட்பட அனைத்து செலவினங் களையும்  செய்தவர். 
ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டவருக்கு விட்டுக்குடுத்த மாமனிதர்!
கனவு காண்! நாட்டை முன்னேற்று ! அக்கினி சிறகை விரி ! தன்னம்பிக்கை கொள் ! என்று நல் விதைகள் தூவி இளைய தலைமுறையை செழிக்கச் செய்த சீமான்!
இந்தியா மட்டுமல்லாமல், தாண்டி: பாரே பின்பற்றும் முன்மாதிரி! 
தனது பதவிக்காலம் முடிந்து தனக்கு வந்த பரிசுப்ப்பொருளை தனது சொந்த கிராமத்துக்கு ரயில் ஏற்றிவிடாத முதல் குடிமகன்!
அவர் சொன்னார் : நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால் , இறப்பு ஒரு சரித்திரமாக இருக்கவேண்டும்.
இதோ ....அவர் சரித்திரம் ஆனார்!
--வைகறை கண்ணன்       
    
    

ஞாயிறு, 26 ஜூலை, 2015

நரகத்தின் வழியாக சொர்க்கம் !

நரகத்தின்  வழியாக சொர்க்கம் !

இப்போதெல்லாம் நாளேடுகளை புரட்டினால் தற்கொலை செய்திகள் தான் அதிகம் இடம்பிடித்து வருகின்றன . தற்கொலையில் தமிழகம் இரண்டாவது இடம் .
பெருகிவரும் தற்கொலைக்கு காரணம் என்ன? ஆராய்ந்து பார்தோமேயானால், மலையளவு  இல்லை !
கணவனுக்கு வேலையில்லை பொறியியல் படித்த மனைவி தற்கொலை !
காதலுக்கு வீட்டில் எதிப்பு காதலர்கள் தற்கொலை !
செய்து வந்த தொழிலில் நஷ்டம், தொழில் அதிபர் குடும்பத்தோடு தற்கொலை ! தீபாவளிக்கு துணி எடுக்கவில்லை தற்கொலை தான் முடிவு !
சின்ன சின்ன விசியங்களுக்கெல்லாம் தற்கொலை தான் தீர்வா ?
இன்று நல்ல விசியங்கள் அருகி வருகின்றன .அல்லாத விசியங்கள் பெருகி வருகின்றன.நல்லவைகளை கற்றுக்கொள்ள மறுக்கிறோம் ! அல்லவைகளை  தெரிந்துகொள்ள விழைகிறோம் !.
பிரட்சனைகள் எதுவானாலும் எதிர்கொள்ள பழகுவோம்!
போராட்டம் தான் ஒருவனக்கு பெரும் படிப்பினை !.
நமது வாழ்க்கையில் நாம் பெறும் பெரிய நன்மை இந்தப் போரட்டப்பயிற்சியே  போராட்டத்தின் வழியாகவே நாம் செல்ல வேண்டும் . சொர்கத்திற்கு  ஒரு பாதை இருக்குமானால் அது நரகத்தின் வழியாகவே இருக்கும்.நரகத்தின் வழியாக சொர்கத்திற்கு செல்வது தான் என்றும் உள்ள வழி !. ஒரு முறை அல்ல  : பல்லாயிரம் முறை சூழ்நிலையுடன் போராடி , இறந்து , அப்போதும் , தைரியத்தை இழக்காமல் ஆன்மா போராடுமானால் அது பேராற்றல் உள்ளதாக  மாறிவிடும். வாழ்க்கைப் பிரச்சனைகளைத் துணிவுடன் எதிர்கொள்ளுங்கள் . 
"குந்தியின் மகனே !
கொல்லப்பட்டால் சொர்கத்தை அடைவாய் !, வெற்றி பெற்றால் நாட்டை அனுபவிப்பாய் ! அதனால்,போரிடுவதற்கான உறுதியுடன் எழுந்திரு !" -என்று  கண்ணன் கீதையில் அர்ஜுனன்னுக்கு கூறினார் .
வாழ்க்கை எதுவானாலும் தோல்வி மனப்பான்மையை விட்டுவிட வேண்டும். 
தோல்வி மனப்பான்மையும், தளர்ச்சியும், வாழ்கையின் மலர்ச்சியை மறுப்பதாகும்!             

வியாழன், 14 மே, 2015

நீதியற்ற ஊக்கம் கொடுங்கோலானது !

நீதியற்ற ஊக்கம்  கொடுங்கோலானது !

சில  தினங்களுக்கு முன்பு சென்னை நெற்குன்றம் மேட்டுக்குப்பம் பகுதியைச் சார்ந்த நண்பர்கள் மூன்று பேர் ஒரே மோட்டார் சைக்கிளில் சினிமா பார்பதற்காக சென்றிறுந்தனர்.
அப்போது, கே.கே.நகர் 80அடி சாலை அருகே அவர்கள் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது, வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலிசார் , மூன்று பேர் ஒரே மோட்டார் சைக்கிளில் செல்வதை தடுக்கும் பொருட்டு மோட்டார் சைக்கிளை நிறுத்துவதற்காக சைகை காட்ட , மோட்டார்  சைக்கிளை ஓட்டிவந்த நண்பர் வாகனத்தை  நிறுத்தாமலே வேகமாக ஓட்ட முயற்சித்துள்ளார்.
போக்குவரத்து போலிசார் அவர்களை பிடிக்க முயற்சிக்க , அவர்களோ தப்பிக்க முயற்சிக்க  திடீர்ரென்று எதிர்பாராத அந்த விபரீதம் நிகழ்ந்து விட்டது.

சாலை தடுப்புச் சுவரில் இருந்த கம்பியில் மோதியதில் குடல் சரிந்து பரிதாபமாக ஒருவர் உயிர் இழந்தார்.
இது  தெரிந்து பொதுமக்கள் உடனே சாலை மறியலில் ஈடுபட்டு , ஆவேசத்தில் சாலை தடுப்புச் சுவரின் கம்பிகளை ஆவேசத்துடன் உடைத்தனர்.
பொதுமக்களின் போராட்டத்தின் காரணமாக சம்பந்தப்பட்ட போக்குவரத்து போலிசார் இடம்மாற்றம் செயப்பட்டனர்.
இது போன்று அவ்வப்போது சாலை மறியலும் காவலர்கள் இடமாற்றமும்   நடந்து கொண்டு தான் இருக்கிறது

இச் சம்பவம் நமக்கு உணர்த்துவது என்ன ? இனியும் நடக்காமல் தடுக்க என்ன செய்யலாம் ? பொது மக்கள் எவ்வாறு உதவலாம் ?

இதே போன்று சென்ற மாதம் வியாசர்பாடியில் ஒரே வாகனத்தில் மூன்று மாணவர்கள் அதுவும் இளையவர்கள் (மைனர் ) ஓட்டிச்செல்லும் போது விபத்து ஏற்பட்டு உயிர் இழப்பு ஏற்பட்டது.
அப்போதாவது பெற்றோர், பொதுமக்கள் ,காவல்துறை விழித்திருக்க வேண்டும் !
ஒரே வாகனத்தில் மூன்று பேர் பயணிப்பது  போக்குவரத்து சட்டம்  பிரிவு 128 க்கு எதிரானது .
இரண்டு சக்கர மோட்டார் சைக்கிளை ஓட்டுபவர் தன்னுடன் கூட ஒரு நபரைத் தவிர மேற்கொண்டு நபர்கள் எவரையும் ஏற்றிச்செல்லுதல் கூடாது.

சாலை போக்குவரத்து ஒழுங்கை பராமரிக்கும் காவல் அலுவலரின் அனைத்து  கட்டளைகளுக்கு ஏற்பவும் வாகன ஓட்டுனர் செயற்படுதல் வேண்டும் என்று பிரிவு 119 அறிவுறுத்துகிறது.

மேற்கண்ட விபத்தில் பிரிவு 128, பிரிவு 119 ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றம் நிகழ்ந்திருக்கிறது.
ஆனால், பொதுமக்கள் பணி செய்துகொண்டிருந்த காவலரை துரத்தி துரத்தி அடித்துள்ளனர்.
மேலும், சாலை பாதுகாப்பு கருதி சாலை நடுவே அமைக்கப்பட்டிருந்த தடுப்பை உடைத்தெறிந்துள்ளனர்.
பொதுமக்களின் எதிர்ப்பை சமாளிக்க காவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மரணத்தையும் பாதிப்பையும் நான் உணராமல் சொல்லவில்லை!
உணர்வதினால் தான் சொல்கிறேன்.

தன் அன்பு மகன்களை நல்ல பண்புகள் பின்பற்றி வளர உதவுங்கள் !
பொது மக்கள் என்ன நடந்தது? எப்படிநடந்தது? குற்றம் யார் மீது ? என்று 
தெரிந்து செயல்படுங்கள் ! 
ஒரு பேருந்தில் நடக்கும் ஜேப்படி திருடனுக்கு எதிராக செயல்பட துணிந்ததுண்டா? பொது இடத்தில் நடக்கும் வன்முறையை தடுக்க, அத்துமீறலை தடுக்க  காவல் துறைக்கு தகவல் கொடுத்து உதவ துணிந்ததுண்டா?

சட்டத்தை நடைமுறைப்படுத்தும் ஏஜென்சிகளும் , பராமரிக்கும் காவல் துறையும் தங்கள் கடமையை சரியாக செய்து வந்தால், இதுபோன்ற நிகழ்வுகளை தடுத்திருக்கலாம்.
இன்று இரண்டு சக்கர வாகனங்களில் குடும்பம் குடும்பம்மாகதானே பயணிக்கிறார்கள் !
மூன்று இளைஞர்களுடன் பறக்கும் இரண்டு சக்கர வாகனங்கள் தானே சாலைகளில் அதிகம் பார்க்க முடிகிறது.
   இன்னும் சொல்லபோனால் 10 வயது சிறுவன் சிறுமி கூடபோக்குவரத்து காவலர் பார்த்தால் தண்டனை உண்டே என்கிற பயமே இல்லாமல்  சாதாரணமாக சாலைகளில் வாகனங்கள் ஓட்டிச்செல்வதை பார்க்க முடிகிறது என்றால்...!
ஊக்கமற்ற நீதி உயிரற்றது.
நீதியற்ற ஊக்கம் கொடுங்கோலானது !-பிளாய்  பாஸ்கல் கூறிய நீதி மொழி எவ்வளவு உண்மையானது!
                                                 புகைப்படம் : தினத்தந்தி நாளிதழ்
       
    
     
        
.

                   

திங்கள், 11 மே, 2015

நல்ல நண்பன் !

புத்தகம் 
மனதின் படைப்பு !
புத்தகம் 
படிப்பது 
சுகமானது மட்டுமல்ல...
இளமைக்கு 
வழிகாட்டி !
பருவத்தில் 
பொழுதுபோக்கு 
தனிமைக்கு 
பெருந்துணை !

புத்தகம் 
வாழ்வதற்கே 
பாடம் நடத்தும் 
வாத்தியார் !

புத்தகம் 
மானிட சமுதாயத்தின் 
நாட்  குறிப்பேடு !

புத்தகம் 
ஒரு 
நல்ல நண்பன் !
எண்ணங்களை,
உணர்வுகளை 
பகிர்ந்துகொள்வதால் ..

புத்தகம்  ஒரு  உளி!
காந்தியை 
மகாத்மாவாக 
செதுக்கியதால் !

புத்தகம் 
ஒரு 
நெருப்பு !
சோவியத் புரட்சிக்கும் 
இந்திய விடுத்தலைக்கும் 
புடம் போட்டதால் ...

புத்தகத்திலிருந்து 
அந்நியப்படுவது 
வாழ்விலிருந்தே  
அந்நியப்படுவதாகும் !
புத்தகம் படிப்பதை 
இனி 
வாழ்க்கைமுறையோடு 
இணைய வைப்போம் !

   



ஞாயிறு, 10 மே, 2015

ஜனநாயகம் நிபந்தனைக்குட்பட்டது!

ஜனநாயகம்  நிபந்தனைக்குட்பட்டது!

பெரிய திருடனை 
வீழ்த்த,
சின்ன திருடனோடு 
கூட்டுவைக்கும் 
சமூகக் காவலர்கள்!
இங்கே 
ஜனநாயகம் 
நிபந்தனைக்குட்பட்டது !

காந்தியை 
சுட்டவர்கள்,
காந்தி சிலைக்கு 
மாலை போட்டு
தேர்தல் பிரசாரம் 
தொடங்குகிறார்கள்!

இதயத்தில்  இடம் 
கொடுத்தவர்கள்,
இட ஒதுக்கீட்டில் 
இடம்  தரமுடியாது
என்றவர்கள்,
உபதேசம் செய்கிறார்கள் ...
முடியாது  என்பதே,
உலகத்தில் கிடையாது என்று !
இங்கே
ஜனநாயகம்
நிபந்தனைக்குட்பட்டது !

பாரதியின் 
கோபத்தை 
புடம் போட்டவர்களே ...
மாறும்  என்கிற 
வார்த்தையை தவிர 
எல்லாம் 
மாறும் !
என்று 
சாதகம் செய்கிறார்கள் !

கும்பிடும்  கைக்குள் 
கத்தி என்பதே 
இங்கே 
இலக்கியமாகிறது!
இங்கே
ஜனநாயகம்
நிபந்தனைக்குட்பட்டது !

வெற்றி பெறும்போது
தட்டிக் கொடுக்காதவர்கள்,
தடுக்கி விழும்போது
கை தட்டுகிறார்கள் !

பார்வையை
பறித்துவிட்டு
கண் கண்ணாடி
இலவசம் தருகிறார்கள் !

காளையை
நசுக்கிவிட்டு ,
முரட்டுக்காளை என்று
முரசு கொட்டுகிறார்கள்!

கோழையின் கையில்
துப்பாக்கி கொடுத்து
புரட்சி ஓங்குக! என்று
ஓலமிடுகிறார்கள்.

இங்கே
ஜனநாயகம்
நிபந்தனைக்குட்பட்டது !

சுட்டு விரல் 
நீட்டினால்,
உன்னை நோக்கும் 
கட்டைவிரல் 
கவனி 
என்கிறார்கள்.

கோபம் கொண்டால் 
பண் படு என்கிறார்கள் !

கோளாறு 
சித்தத்திலா ?
சுற்றத்திலா?

இங்கே
ஜனநாயகம்
நிபந்தனைக்குட்பட்டது !







        

வெள்ளி, 8 மே, 2015

கண்ணியமானவர்களா கவுன்சிலர்கள் ?

கண்ணியமானவர்களா கவுன்சிலர்கள் ? 

அன்று மாநகராட்சி கூட்டத்தில் மாறுபட்ட பரபரப்பு! எப்பவும் கவுன்சிலர்கள்  ஒருவருக்கொருவர் அடித்துக்கொள்வதும், நாற்காலிகளை  தூக்கி வீசுவதும்  என்ற வழக்கமான பரபரப்பு  இல்லை !.
மாறாக, ஆளுங்கட்சி  கவுன்சிலர் ஒருவர்  சென்னை மாநகராட்சிக் குட்பட்ட  சுடுகாடு , இடுகாட்டில்  பிணங்களை எரிப்பதற்கு இறந்தவரின் குடும்பத்திலிருந்து  அளவுக்கு அதிகமாக  பணம் வசூலிப்பதாகவும், இதனால் ஏழை எளிய மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாவதாகவும் பேசி அசத்தியிருக்கிறார்.
வேறுருவர் சுடுகாட்டில் பிணங்களை எரிக்க பணம் வாங்கக்கூடாது என்கிற அறிவிப்பு பலகை சிறியதாக வைக்கப்பட்டுள்ளதாம் அதனால் அந்த அறிவிப்பு பலகையை பெரியதாக வைத்தால் தான் பணம் வசூலிப்பது தவிர்க்கப் படுமாம் என்று பேசி பரபரப்பை இன்னும் கூட்டியிருக்கிறார்.
கவுன்சிலர்கள் என்ன கண்ணியமானவர்களா?
கவுன்சிலர்களிடம் , வாங்கிய கடனை திருப்பி கேட்டுப்பாருங்கள்! சென்னை நகரில் புதியதாக  ஒரு வீடு கட்டிப் பாருங்கள்?  குடிநீர் குழாய் இணைப்பு  கொடுத்துப் பாருங்கள்?
பொது ஜனங்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த  இவர்கள் ஏதோ வானளாவிய அதிகாரம் பாடைதவர்கள் போல் நடந்து கொள்கிறார்களே ...என்ன கொடுமை சார் !
ஒரு இஞ்சினியர் முறையான வரைபட , மாநகராட்ச்சி அனுமதி பெற்று கட்டிய ஒரு வீட்டை ,மேல் தளத்தில் நீர் ஊற்றி தளம் சிறிது ஊறட்டும் என்று இருக்கும் போது அதனால் கொசு உருவாகிவிடும் என்று கவுன்சிலர் பிரச்னை செய்து  ரூ .50.000/- வாங்கிக் கொண்டதும் சுகாதாரப் பிரச்னை முடிவுக்கு வந்தது!.
பாவம் முதியோர்கள். முதியோர் உதவித்தொகை வாங்குவதற்கு இவர்களிடம் ஒரு கையெழுத்து வாங்கப்போனால் அவர்களிடம் கூட முடிந்த வரையில் கரந்து விடுகிறார்கள்.
அடையாரில் ஒரு  ஓட்டல் முன்பு இருந்த மின்சார ஜங்சன் பெட்டியை தனது செல்வாக்கை பயன்படுத்தி அப்புறப்படுத்தி தருவதாக ரூ .50,000/- கேட்டு தொல்லை தந்த பெண் கவுன்சிலர் குறித்து ஒரு தொலைக்காட்சியில் உலகமே சிரித்தது.
முதலில் கவுன்சிலராகிய நீங்கள்  உங்கள் பொறுப்பையும் கடமை யுணர் வையும் அறிந்து நடந்து கொள்வீர்களா? நீங்கள் சொத்து வரி  குடிதண்ணீர் வரி செலுத்துவீர்களா? மாநகராட்சி விதிமுறைகளை கடைபிடிபீர்களா?
     
  சிலி நாட்டில் சாந்தியாகோ நகருக்கு அருகில் அமைந்திருக்கிறது கோபியாகோ.
மினேரா சான் எஸ்டபான் பிரை மெரா  என்ற தங்கம்  மற்றும் தாமிர சுரங்கங்கள் உள்ளன .
2010, ஆகஸ்ட் 5 அன்று ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ஒரு சுரங்கத்தின் நுழைவுப்பகுதிஅடைத்துக்கொள்ள,சுரங்கத்தின் உள்ளே 33 தொழிலாளர்கள் 2000 அடிஆழத்தில் 69 நாட்கள் சுரங்கத்தின் உள்ளே மாட்டிக் கொண்டார்கள்.உயிர் மீட்க நடந்த யுத்தத்தை உலகமே இன்னமும் மறந்திருக்காது.
தரை மட்டத்திலிருந்து ஆழ்துளை யிட்டு அதன் மூலம் ஒரு மீட்பு கூண்டு உள்ளே அனுப்பி ஒவ்வொருவராக மீட்க திட்டம் .
 சுரங்கத்தின் அடிமட்டம் அடைந்தது பீனிக்ஸ் கூண்டு .அதைக் கண்டதும் தொழிலாளர்கள் இதயத்தில் இன்பம் சுரந்தது .இருந்தாலும் எந்த நேரத்தில் எது நடக்குமோ என்கிற சூழல் .
அப்போது, ஒரு தொழிலாளி சொல்கிறார் : நீங்கள் எல்லோரும் மேலே செல்லுங்கள். நான் கடைசியாக வருகிறேன். உடனே இன்னொருவர் , நீ இளையவர் முதலில் நீ செல் என்று விட்டுக் கொடுக்க , மற்றொருவரோ நான் 33 வது ஆள் என்று குரல் கொடுக்க , கூடாது : நான் சிப்டு கேப்டன் நான் தான் கடைசியில் வருவேன் என்று சொல்லி விட்டு அனைவரையும் கூண்டில் ஏற்றி மேலே அனுப்பிவிட்டு கடைசி நபராக வெளிப்படுகிறார் சுரங்க கேப்ப்டன் லூயிஸ் உர்சுவா.
இந்த கண்ணியம் நமது கவுன்சிலர்களுக்கு வரவேண்டும்!
நம்புவோம் !
குடை ஒன்று சொல்கிறது ...
"என் கவலையெல்லாம் 
எப்படிப்பட்ட பேய் மழையானாலும் 
என் மக்களை நனைய விடக்கூடாது.
எப்படிப்பட்ட கொடும் வெயிலானாலும் 
என் மக்களைக்  காயவிடக்கூடாது!"          
  
                                   

செவ்வாய், 5 மே, 2015

அவமானம் !

அவமானம் !

வாழ்க்கைக் கடலில் 
திசைகாட்டி !
 
தடைக்கல்
நகர்த்தும் 
நெம்புகோல் !

காற்றில்   ஆடும் 
தீப  ஒளிக்கு 
தூண்டுகோல் !

தோல்வியை 
கூர்மைபடுத்தும்
சாணைக்கல் !

முன்னேறிச் செல்ல
மைல்கல் !

நீ 
சிகரம்  ஏற 
பிடிமானம் !

உன் 
வெற்றி முகத்திற்கு 
அணிகலன் !

அவமானங்களின்
கணக்கில்தான் ...
தீர்மானிக்கப்படுகிறது
வாழ்க்கை !  
  

வியாழன், 9 ஏப்ரல், 2015

தாயே உங்கள் மகன் எங்கே ?

தாயே உங்கள் மகன் எங்கே ?
ஒருவன் கேட்கிறான், "தாயே உங்கள் மகன் எங்கே இருக்கிறான் ?"
தாய்  சொல்கிறாள் .
என் மகன் எங்கே இருக்கிறான் என்று எனக்குத் தெரியாது .அனால் ஒன்று , புலி கிடந்து போன மலைக் குகையைப் போல அவனைப் பெற்ற வயிறு என்னுடையது . போர்க்களத்தில் சென்று பாருங்கள் .அங்கே அவன் இருக்கக் கூடும் !.-இது சங்க இலக்கிய புற நாநூறுவில் வீரத் தாய் ஒருத்தி சொன்னது .
அதே போன்று ஒரு வீட்டில் சென்று, அந்த வீட்டுத் தாயிடம் சிறுவன் ஒருவன் கேட்கிறான், "அம்மா உங்கள் மகன் சொரிமுத்து எங்கே ?"
தாய் சொல்கிறாள்  " வெளியே போனவன் வீட்டுக்குத் திரும்பவில்லை விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறைப்பட்டிருப்பான்.
நாகர்கோயில் சப் ஜெயிலிலோ, திருவனந்தபுரம் மத்திய ஜெயிலிலோ சென்று பாருங்கள் அங்கே இருக்கக்கூடும் என்று தோழர் ப.ஜீவானந்தத்தின் தாய் சொன்னது.
அப்படித்தான் நேற்று ஒரு வீட்டில் சென்று, அந்த வீட்டுத் தாயிடம் ஒருவன் கேட்டான்,
"அம்மா  உங்கள் மகன் எங்கே ?"
அதற்கு அந்த தாய் சொன்னாள் "காலையிலே போனவன் இன்னும் வீடு திரும்பல.எங்கயாவது குடிச்சுட்டு ரோட்டுல விழுந்து கிடப்பான்.அந்த புறம்போக்கு ஏறுனா டூட்டி இறங்குனா டாஸ்மாக்கு.என்ன செய்ய?"
கேட்டவன் தலை குனிந்தபடியே திரும்பிப் பார்க்காம நடையை கட்டிட்டான்னா பாருங்களேன்!.               

ஞாயிறு, 5 ஏப்ரல், 2015

சு.சமுத்திரம் சில நினைவுகள்

சு.சமுத்திரம்  சில நினைவுகள் 

புதினம் , நாவல் , சிறுகதை .கவிதை ,கட்டுரை ,நாடகம்  என்று பல  தளங்களில் இயங்கியவர்,சு.சமுத்திரம். வேரில் பழுத்த பலா நாவலுக்கு சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.
திருநெல்வேலிக்காரர்.அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்சனில் பணியாற்றியவர்.
இடது சாரி சிந்தனையுள்ளவர்.வள்ளலார் சிந்தனை ஆர்வலர். சாது!ஆனால்,போர்க்குணம் கொண்டவர்.
1995 டிசம்பரில் முதன்முதலாக அவரது இல்லத்தில் சந்தித்தேன். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கலை இரவு 95" நிகழ்ச்சிக்கு அழைப்பிதல் கொடுப்பதற்கு சென்றிருந்தேன். அதுதான் என் முதல் சந்திப்பு. அந்த    அழைப்பிதலில் முகபோவியம் நானே வரைந்திருந்தேன். அது கண்டு உங்களுக்கு ஓவியம் வருமா? என்றார். .சுமாரா வரைவேன் என்றேன். அப்படியானால், எனது அடுத்த புத்தகத்திற்கு நீங்கள் தான் முகப்போவியம் வரைகிறீர்கள் என்றார். அப்போது என் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை !
இன்னோருநாளில் சாஸ்திரிபவன் வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்திக்கச் சென்றேன். அது, எனது திருமணத்திற்கு அழைப்பிதல் கொடுப்பது நிமித்தமாக...அவரது உதவியாளர் என் பெயரை சொன்னதும் உடனே அவரது இருகையிலிருந்தவாறே என்னை அழைத்தார்.நான் அருகில் சென்றதும் "என்னயா நீ படபிடிப்பு தொடக்க விழாவிற்கு கூப்பிட்ட அதோடு இப்பதான் வந்திருக்கே.படம் நல்லா வந்திருக்கா, எப்ப படம் வெளியிடபோறே? ஒருவேளை படம் வெளிவந்திருச்சா? எப்படியிருக்கே? ரொம்ப நாளா காண்டக்டே இல்லையே? என்ன எப்படி இருக்கே?"-என்று இடைவெளியே விடாம பேசி முடிச்சார்.
அப்போது எனக்கு முன்னே அங்கு சு.வெங்கடேஷ் உட்ககார்ந்திருந்தார்.(சாகித்ய விருது பெற்ற காவல் கோட்டம் நாவல் எழுதியவர் ) அவருக்கும் என்னை நன்கு தெரியும். அவர் சமுத்திரம் தோழரிடம் ஏதோ சொல்ல வந்ததை சொல்ல  தயங்கினார். நான் அவரது தயக்கத்தை புரிந்துகொண்டு நானே சமுத்திரம் தோழரிடம் சொன்னேன்,"தோழர் நான் வைகறை பூக்கள் சினிமா இயக்குனர் இ.மு.வெற்றிவளவன் இல்ல.நான் வைகறை கண்ணன் என்றதும் அவர் சிரித்து விட்டார்.
அடுத்தவர்களுக்காக வாழும் உனது வாழ்வு தான் அர்த்தம் மிகுந்தது என்று ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் சொன்னது தோழர் சமுத்திரம் அவர்களுக்கு  மிகவும் பொருத்தமாக இருக்கும் .
ஆம் , வாச்சாத்தி சம்பவம் அனைவருமே அறிந்தது. அந்த சம்பவத்தை மையமாக வைத்து  சிறுகதை எழுதி தினத்தந்தி ஞாயிறு மலரில் வெளிவந்தது.அந்த கதைக்கான சன்மானத்தை வாச்சாத்தி சம்பவத்தால் பாதிக்கப்பட்ட  கிராம மக்களுக்கான வழக்கு செலவுக்காக கொடுத்தார். அதேபோன்று திருநங்கைகள் வாழ்வு ,அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து வாடாமல்லி நாவல் எழுதி அதன் சன்மானத்தை திருநங்கைகளுக்கு கொடுத்து உதவினார் .இன்னும் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.அன்று (2003-ல்) அவரது காரை அவரே ஓட்டிச்சென்ற போது எதிர்பாராத விபத்தில் பலியானார்.அவருக்கு ,
30.04.2003-ல் சென்னை துறைமுகம் தமிழ்ச்சங்கம் நடத்திய நினைவஞ்சலி கூட்டத்தில் வாசிக்கப்பட்ட கவிதை இது .


எளிமைக்கு
சிம்மாசனம் 
மரணமா ?

நீ ...
இலக்கியமாய் 
வாழ்ந்ததனால் 
இயற்கைக்கும் 
பிடிக்கலையா ?

படைப்புக் கலையில்
நீ, 
ஏகலைவன் !
என்பதனால் 
உயிர்ச்சேதமா?

சமுத்திரம் 
என்றதனால் 
நீ 
வான் நோக்கி 
பயணமா?

உன் 
புத்தகத்திற்கு 
அட்டைப்படம் 
வரையத்தானே ..
வாய்ப்பு தருவதாக 
எனக்கு 
வாக்கு கொடுத்திருந்தாய்!
அஞ்சலி கவிதைக்கு 
என 
ஏன் வாக்கு தவறிவிட்டாய்!

கருப்பு 
வெள்ளையில் 
நீ 
எப்போதும் 
சிரித்த முகம் !

நடந்தது  
அநீதி 
என்றால்,
எங்கேயும் 
நீ 
எதிர்ப்புக்குரல் !

ஆள்பவர் 
அடக்கும் போதெல்லாம் 
நீ 
மக்கள் குரல் !

சமுத்திரம் 
நீ...
நாற்றாங்காலிலிருந்து 
வயலுக்கு 
பிடுங்கி 
நடப்பட்ட 
செந்நெல் !

கண்ணீர் இடுகிறேன் 
வளர்க! வாழ்க !!     
     
                               
                    

வியாழன், 2 ஏப்ரல், 2015

காவல்

காவல்
நடு  நிசி
இருட்டில் ,
வங்கி
அலாரம் அடித்தது
கொள்ளையை  தடுக்க !

கோழி
கொக்கரித்தது .
பாம்பின்
ஊடுறுவலை
தெரிவிக்க !

கூண்டுக்கிளி
சொன்னது ,
யாரோ  ஒருவரின்
பிரவேசிப்பை !
எஜமானின்
ஒத்தை  வீட்டில்
நாய் குரைத்தது
அத்து மீறலை
அகற்ற !

ஏனோ ...
காக்கிசட்டை
துப்பாக்கி ஏந்தி
விறைப்போடு வேடிக்கை பார்த்தது ...

அரசியல் விழாவில்
கண்முன்னே
மின்திருட்டு !

புதன், 1 ஏப்ரல், 2015

என் உசுறக் காணலியே

என் உசுறக் காணலியே 
வளையல் வித்து படிக்கவெச்சே 
வாழ்ந்து காட்ட ப்ழக்கிவிட்டே 
வச்சவாழை தழைக்கு முன்னே 
வேர் அறுந்து போனீரே !

வருசமெல்லாம் நடுந்து வந்த
விவரம் சொன்ன வருசநாடு -உனக்கு 
காச நோயின்னு சொல்லலியே !-இந்த 
பாச மகன் என்ன செய்வேன்?

உச்சி பிளக்கும் வெயலக்கண்டு 
உறங்கி வந்த செங்குலமோ - உனக்கு 
மூச்சு நிண்டத சொல்லலியே !- இந்த 
மூத்த மகன் என்ன செய்வேன் ?

ஆலந்தளீ ர் ஓடையோரம் - நீ 
அடுத்தடுத்து வெச்ச மரம் 
ஊரைக்காத்த வேப்பமரம் 
உன்னைக் காக்க மறந்திருச்சோ!

வெள்ள வேட்டி வெள்ளச் சட்ட -நீ 
விரும்பி உடுத்த வாங்கிவந்தேன் 
என் உசுறக் காணலியே - இந்த 
ஏழைமகன் என்ன செய்வேன் ?

உசுறக் காக்கும் டாக்டரெல்லாம் 
உயர் பட்டணம் வசிக்கணும்மா?
பட்டிக்காடு நம்ம ஊரு ( மயிலாடும்பாறை ) -இனி 
படிச்சுசறும் டாக்டரு பலபேரு !        

திங்கள், 30 மார்ச், 2015

வேர்கள்

வேர்கள்
   எங்கள் கணக்குவாத்தியார் 
பிணக்கான  கணக்கையும் 
தனக்கான  முறையிலே 
விடை  காண 
வழி  காட்டினார் !

இறைவணக்கம் 
பாடும்  போதும் 
இடைவேளை 
உரை  நிகழ்த்தி 
எண்ணங்களை 
உயர்வாக்கினார்!

கிராமத்து கூலிகளின் 
இளைய  தலைமுறையை 
செழிப்பாக்கினார் !
நான் ,
சொந்த ஊர் (மயிலாடும்பாறை )
சென்றிருந்த   போது.....
கணக்கு  வாத்தியார் பற்றி 
பள்ளியில் விசாரித்தேன்.
யாவருக்கும் 
 விளங்கவில்லை !
எவருக்குத்   தெரியும் 
வேர்கள் ! 

சனி, 28 மார்ச், 2015


பிறரை மதியுங்கள் !

எனது நண்பரொருவர் இன்று என்னை சந்திக்க வந்திருந்தார் .அப்போது அவர் மிகவும் வாட்டமுடன் காணப்பட்டார்.அவர் சுற்றுலா வாகன ஓட்டுநர்.சென்னையிலிருந்து திருப்திக்கு தினமும் பகதர்களை அலைதுச் செல்பவர்.தனது காரில் பக்தர்களை ஏற்றிக்கொண்டு காலையில் சென்னையிலிருந்து  புறப்பட்டு திருப்தி தரிசனம் முடிந்து  இரவு எட்டு மணியளவில் சென்னை வந்தடைவார்.அப்படி நேற்று தனது காரில் ஒரு வழக்கறிஞரை திருப்தி தரிசனம் காண அழைத்துச் சென்றிருக்கிறார்.சிறப்புத் தரிசனம் அது .அதற்க்கு ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யவேண்டும். நமக்கு வேண்டிய நேரத்தில் தரிசனம் டிக்கெட் கிடைப்பது அரிது.எந்த நேரம் தரிசனம் டிக்கெட் கிடைக்கிறதோ அதில் நாம் தரிசனம் செய்வது வாடிக்கை.இதில் வழக்கறிஞரின் விருப்ப நேரத்தில் தரிசன டிக்கெட் கிடைக்கவில்லை என்பதற்காக, வழக்கறிஞர்  வேண்டுமென்றே திருப்பதியில் அறை எடுத்து தங்கியுள்ளார்.வேண்டுமென்றே மிக மிக காலதாமதம் செய்து மறுநாள் அதிகாலை சென்னை வந்து சேரும்படி செய்துள்ளார்.வாகனத்தில் வரும்போது கார் ஓட்டுனரை எழுதமுடியாத வார்த்தைகளால் திட்டித் தீர்த்துள்ளார்.நான் யார் தெரியுமா? உன்னை கோர்ட்டுக்கு இழுக்காம விடமாட்டேன் என்று பயமுறுத்தியிருக்கிறார்.
நாம் கோவிலுக்கு செல்வதே அமைதியை தேடித்தான் செல்கிறோம் .நமை நாமளே சுய பரிசோதனை செய்து கொள்ளத்தான்.கோவிலுக்கு சென்றுவிட்டு அநீதியையும் செய்வதை என்னென்று சொல்லுவது?.
ஆபிரகாம் லிங்கன் தனக்கு கார் ஓட்டிவந்த ஓட்டுனர் களைப்பால் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருக்கும் போது அவரது இரு கால்களையும் பிடித்து  அமுக்கி  விட்டாறாம்!. 
சாதி,சமயம் ,நாடு ,மொழி,ஆகிய எல்லைகளை கடந்து மனித நேயமாகிய அன்பின் அடிப்படையில் அமைவது அக வாழ்வு!.ஒருவர் மற்றவர் மீது கொள்ளும் பற்றே அடிப்படையாக அமையும்.அந்தப் பற்று அன்பால் மலர்ந்து அருளாய் மனம் பரப்ப அனைத்து உயிர்களும் நலம் பெற உதவும்.தாம் இனிது வாழ்ந்து,தம்மை சார்ந்தாரையும் இனிது வாழவைக்கும் தூய அக வாழ்வே வாழ்வு!
பிறரைப் பாராட்டுங்கள்! பாராட்டு கிடைக்கும்.பிறரை மதியுங்கள்! மதிப்பு கிடைக்கும் .அன்பு செலுத்துங்கள்! அன்பு தேடி வரும்.இவைகள் ஒற்றையடிப்பபாதைகள் அல்ல , இரட்டை வழிப் பாதைகள் என்கிறார் முகமது  நபி அவர்கள் .
தயவுகூர்ந்து பிறரை மதியுங்கள்!