நேற்று (20.10.2015 )
காலை 10 மணிக்கு அலுவலகம் திறக்கும் போதே ஒரே டென்ஷன் !
காரணம் அலுவலகம் முன்பு ஆட்டோக்களின் அணிவகுப்பு ,ஆக்கிரமிப்பு !
எத்தனை முறை தான் ஆட்டோ ஓட்டுனர்களிடம் இப்படி அலுவலக வாசலில் நிறுத்தாதீர்கள் என்று சொல்வது.
அலுவலகம் அமைந்துள்ள அந்த சாலையின் முழுக்கவே இரண்டு புறமும் இடைவெளி இல்லாமல் தொடர்ச்சியாக ஆட்டோக்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
தினமும் இவர்களுடன் அக்கப்போர் தான் !
20 ஆட்டோகளில்லிருந்து 30 ஆட்டோக்கள் வரை வரிசையாக நிறுத்தி விட்டு, ஓரிடத்தில் ஒரு ஆட்டோவில் எல்லா ஓட்டுனர்களும் அமர்ந்து கொண்டு அரட்டை அடிப்பது . இதனால் ஏற்படும் வாகன நெரிசலில் கார் ,இரண்டு சக்கர வாகன ஓட்டுனர்கள் படும்பாட்டை கண்டு ரசிப்பது ! கோபத்தில் யாராவது ரோட்டுல இப்படி ஆட்டோவை நிறுத்திக்கிட்டா மத்தவங்க எப்படி போறது ? என்று கேட்டால் ரோட்டுலதான் போகணும் என்று சொல்லிவிட்டு எகத்தாலமா சிரிப்பது ! அடுத்து யாராவது கேள்வி கேட்டா...? என்ன போலிசுக்கு போன் போடப்போறயா? என்று ஏளனமா பேசியதை கேட்ட என்னால் பொறுத்துக்கொள்ள முடியாமல் அவசர உதவிக்கு 100 க்கு போன் போட்டு புகார் அளித்தேன்.
வரும் ஆனா வராது என்ற கதையாக எந்த காவலரும் வந்த பாடில்லை !
மாலை சுமார் 5.00 மணியிருக்கும், யம்மா ...என்ற அலறல் கேட்டது. அலுவலகம் வெளியே வந்து பார்த்தால், ஒரு முதியவர் சைக்கிளோடு விழுந்து கிடந்தார். இன்னொரு புறம் ஒரு சிறுவன் இரண்டு சக்கர வாகனத்தோடு விழுந்து கிடந்தான்.
கூட்டம் கூடியது ! ஆளாளுக்கு தனக்கு தெரிந்ததை சொல்லிக் கொண்டிருந்தனர்.
இதெல்லாம் சரிபடாது. பேசாம 100க்கு போன் போடுங்க என்றார் ஒருவர்.
சிறுவன் அழத் தொடங்கினான். அவனிடம் அப்பாவின் செல் நம்பர் கேட்டதும், சிறுவன் கூட்டத்தினரை பார்த்து கெஞ்சினான் !
இதைக்கண்டு அடிபட்ட முதியவரோ,
பாவம் அந்தப் பையன விட்டுடுங்க! ரோட்டுல நின்டிருக்கிற இந்த ஆட்டோவுக்கு பின்னாடி நான் சைக்கிளுல வந்தது அவனுக்கு தெரிஞ்சிருக்காது. மோதிட்டான்.
இந்த சைக்களுதான் எனக்கு சோறு போடுது! வீட்டு வீட்டுக்கு இந்த சைக்கிளுலதான் போயி பழைய பேப்பர் வாங்கி வித்து பொழப்பு ஒட்டிக்கிட்டு வந்தேன்! சைக்கிள ரிப்பேர் பாக்க எவ்வளவு கேட்பானோ ? என்று பொலம்பினார், அவர் அருகில் கிடந்த சைக்கிளின் முன் சக்கரம் அவரது முதுகைப் போலவே கேள்வி குறியாய் நெளிந்து கிடந்தது ! கூட்டத்தில் ஒருவர் ,ஐயா இத வெச்சுக்குங்க சைக்கிள் ரிப்பேருக்கு உதவும் என்று ரூபாய் நோட்டை நீட்டினார்.அவரும் பெற்றுக்கொண்டார். இன்னும் சிலரும் தம்மால் முடிந்ததை அந்த முதியவரிடம் பணமாக கொடுத்தனர். பணத்தை பெற்றுக் கொண்ட முதியவரின் அடிப்பட்ட வலியை மறந்து, அவரது போக்கை வாயில் புன்னகை பூத்தது !